நாள் : 27-12-2020 |
நேரம் : 6 PM to 9 PM |
இடம் : இணையதளம் (Internet) |
தமிழ்மொழி பண்பாட்டு கழகம், சிங்கப்பூர் அன்பு மாணவர்களே! பெற்றோரே! தங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 2020 மாலை 6 மணிக்குத் தனது ஔவையார் விழா, திருக்குறள் விழா, பாரதியார் விழா ஆகிய மூன்று விழாக்களை உள்ளடக்கிய முக்கவி விழாவை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது. கழகம், மூன்று விழாக்கள் தொடர்பான போட்டிகளை இணையம் வழியே நடத்த விரும்புகிறது. அப்போட்டிகள் பாலர் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. இங்கு ஔவையார் விழா பற்றிய போட்டிகள் விரிவான விவரங்களுடன் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அறியுமாறும் ஆதரவு தெரிவிக்குமாறும் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து, பாலர் பள்ளிகள் தொடர்பான போட்டிகளுக்கான தொடர்பு அதிகாரி திருமதி சுமதியுடன் (Mrs Sumathi) தொலைபேசி எண் +65 9106 2232 இலும் mukkavikg@gmail.com, என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடக்கப்பள்ளி தொடர்பான போட்டிகளுக்கான தொடர்பு அதிகாரி திருமதி சௌமியா ரமேஷூடன் (Mrs Soumya Ramesh) தொலைபேசி எண் +65 8258 6772 இலும் mukkavipm@gmail.com, என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. போட்டிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம். இப்போது போட்டிகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். ஒளவையார் விழா பொதுவாக எல்லா விழாக்களிலும் அவற்றுடன் தொடர்புடைய கவிஞர்கள், அவர்களது பாடல்கள் ஆகியன முக்கிய இடம் பெற்றாலும் ஔவையார் விழாவின் போட்டிகளில் கோவிட்-19 சூழலில், களத்தில் முன்னணியில் நின்று பெரும் தியாகச்சேவையை ஆற்றி வரும் சுகாதாரச் சேவையுடன் கல்வி போன்ற பல துறைகளில் முன்னணிச் சேவை ஆற்றி வருவோரைப் பற்றி நினைவூட்டும் ஔவையார் பாடல்களுடன் திருக்குறள் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. இப்போது போட்டிகளைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். 1.ஒளவையார் விழா - போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை ஆறு வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள். இன்று சிங்கப்பூரும் உலக நாடுகளும் கோவிட்-19 என்ற கிருமிப்பரவல் சவாலுக்கும் சிக்கலுக்கும் ஆளாகிப் போராடிச் சமாளித்து மெல்ல மீண்டு வருகின்றன. இந்தப் பெரும் நோய்ப்பரவலிலும், அதிலிருந்து மீண்டுவரும் காலக்கட்டங்களிலும் பல்வேறு துறையினர் தீரர்களாகவும் செயல் வீரர்களாகவும் தன்னலம் கருதாது தன்னம்பிக்கையுடன் நம் அனைவருக்கும் சேவையாற்றி வருகிறார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், காவல் துறையினர், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர், கல்வித்துறையினர், துப்புரவாளர்கள், நாட்டின் அத்தியாவசியச் சேவைத்துறைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோர் நாட்டின் திறம்பட்ட செயல்பாடுகளுக்குப் பின்னால் அச்சாணியாக இருந்து பணி புரிகிறார்கள். இவர்களைப் பற்றியும் இவர்களது சேவைகளைப் பற்றியும் எண்ணி, வியந்து அவர்களுக்கு நமது ஆதரவையும் அன்பையும் தெரிவிக்கும்வகையில் ஒரு போட்டியை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதைப் பற்றிய விவரங்களை இங்கு தந்திருக்கிறோம். நீங்கள் அவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு, உங்களது கருத்துகளை ஒளிப்பதிவு செய்து காணொளியாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள். பாலர் பள்ளி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்: திருக்குறள், ஆத்திசூடி ஆகிய இலக்கிய நூல்களில், சேவை செய்வோரையும் நாட்டுக்காகத் தம் சுகதுக்கங்களை அர்ப்பணிக்கும் தியாக மனம் கொண்டோரையும் பற்றி இடம்பெற்றுள்ள ஐந்து செய்யுள்களைத் தேர்வு செய்து, அவற்றை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். நீங்கள் ஒப்பிக்கும் பதிவுகளைக் காணொளியாகத் தயாரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். காணொளிப்பதிவுக்கான அதிகபட்ச நேரம் 2 நிமிடங்கள். காணொளியை பதிவுத்தாளில் தரப்பட்டுள்ள வழிமுறைகளின்படி அனுப்பி வையுங்கள். தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்: மனப்பாடபோட்டி : திருக்குறள், ஆத்திசூடி ஆகிய இலக்கிய நூல்களில் சேவை செய்வோரையும் நாட்டுக்காகத் தம் சுகதுக்கங்களை அர்ப்பணிக்கும் தியாக மனம் கொண்டோரையும் பற்றி இடம்பெற்றுள்ள ஐந்து செய்யுள்களை அவற்றின் பொருளுடன் ஒப்பித்துப் பதிவு செய்து காணொளியாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள் (நேரம் அதிகபட்சம் 4 நிமிடங்கள்). தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்: “உங்களது தன்னலமற்ற சேவைக்கு எங்களது வாழ்த்துகள்!” தன்னலமற்ற சேவை செய்வோரைப் பற்றிய ஏதேனும் ஒரு பாடலை எடுத்து அதைப் பற்றி உங்களது கருத்துகளையும் அந்தச் சேவையாளர்களுக்கு நீங்கள் கூறும் வாழ்த்தினையும் ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். (நேரம் அதிகபட்சம் 5 நிமிடங்கள்). தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்: இருவர் இணைந்து இணையாகப் பங்கேற்கும் போட்டி "பாடலும் முன்னணி ஊழியர்களும் அவர்களது சேவைகளும்" திருக்குறள், ஆத்திசூடி ஆகிய இலக்கிய நூல்களில் சேவை செய்வோரையும் நாட்டுக்காகத் தம் சுகதுக்கங்களை அர்ப்பணிக்கும் தியாக மனம் கொண்டோரையும் பற்றி இடம் பெற்றுள்ள ஏதேனும் ஒரு செய்யுளைக் கூறி, அதன் பொருளையும் அதை இன்றைய நமது தன்னலமற்ற சேவையாளர்களுக்கும் அவர்களது சேவைகளுக்கும் எவ்வாறு தொடர்புபடுத்தலாம் என்றும் அத்தகு சேவையாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றும் நீங்கள் உங்கள் பள்ளியைச் சேர்ந்த சக மாணவருடன் இணைந்து உரையாடும்வகையில், ஐந்து நிமிட நேரத்துக்கு உங்களது கருத்துகளைப் பேச்சுத்தமிழில் பதிவு செய்து ஒரு காணொளியாக அனுப்பி வையுங்கள். நீங்கள் போட்டிக்குப் பதிவு செய்யும்போது இருவரும் ஒரே நேரத்தில் ஒரே படிவத்தில் பதிவு செய்வது இன்றியமையாதது. அவ்வாறு செய்யாத நிலையில் தங்களது பதிவு ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். சில குறிப்புகள்:
மிக்க நன்றி, வணக்கம். திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர். குறிப்பு: போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில்https://www.tamilmozhi.org/ பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். |