ஆகஸ்டு 10, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6:00 மணி
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954
ஔவையார் என்ற பெண் கவிஞரைப் போற்றிக் கொண்டாடவும் பெண்களின் ஆளுமைத் திறன்களை உலகறியவும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வரும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி “ஔவையார் விழா 2014” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கானப் போட்டிகள் ஜூலை மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றன. தொடக்க நிலை 1 & 2 மாணவர்களுக்கு ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டியும், தொடக்க நிலை 3 & 4 மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டியும், தொடக்க நிலை 5 & 6 மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும் நடைபெற்றன. ஏறத்தாழ 70 தொடக்கப் பள்ளிகளிலிருந்து வந்திருந்த சுமார் 800 மாணவர்கள் இந்த போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 40 தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக வந்திருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சவாலான பணியைச் செவ்வனே செய்தனர். 75 தொண்டூழியர்கள் உதவியோடு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடந்தேறிய “ஔவையார் விழா 2014 போட்டிகள்” தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் கிரீடத்தில் மற்றுமோர் மணிமகுடம் என்று சொன்னால் மிகையாகாது.
போட்டிகளில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நன்றி!