உலகப் பொதுமறையாம் திருக்குறளின் வழி, தமிழ் மொழி இந்த சிங்கை நாட்டில் தொடர்ந்து ஒரு வாழும் மொழியாக நிலைத்திருக்க தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னத பணி ஆற்றி வருகிறது தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்.
ஆண்டு தோறும் தொடர்ந்து திருக்குறள் விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கும் இளைஞர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் பெருகி வருவதை காணும் பொழுது குறள் வழி தமிழ் மொழி வளர தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் செய்துவரும் பணிக்கு தமிழ் பேசும் மக்களிடையே சிறப்பான ஆதரவு பெருகிவருவதை வெளிப்படுத்துகிறது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நம் சமூகத்திற்குப் பெருமை சேர்ப்போரைக் குறள் விழாவில் பாராட்டிச் சிறப்பிப்பதை 1999 முதல் கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த விருது 2007ம் ஆண்டு முதல், திருக்குறள் விழாவின் தலைவர் பொறுப்பேற்ற திரு எம் இலியாஸ் அவர்களின் பரிந்துரையின்படி திருவள்ளுவர் விருது என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் குறள் விழாவில் சிங்கப்பூரின் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவர். தலைசிறந்த வெளிநாட்டுப் பேச்சாளர் ஒருவரின் சிறப்புரையும் இடம்பெறும்
கடந்த காலங்களில் திருக்குறள் விழாக்களில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டு விருதுபெற்றோர் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டால் கட்டுரை மிக நீளமாகும்.