ஜென் துறவி ஒருவர் பெரிய மடாலயத்தில் சீடர்கள் சிலருக்கு கல்வி போதித்து வந்தார். அவர் எப்போதும் தன்னிடம் சீடனாக சேர்ப்பவர்களை பரிசோதித்து தான் சேர்ப்பார். அது போல் ஒரு நாள் மூன்று பேர் வந்து, அந்த துறவியை சந்தித்து அவரது சீடர்களாக ஆசைபடுகிறோம் என்று கூறினார்கள். அந்த துறவியும் அவர்களை மறுநாள் வந்து பார்க்குமாறு கூறினார்.
அவர்களும் "சரி!" என்று சொல்லி சென்று விட்டனர். பின் துறவி தன் சீடன் ஒருவனிடம் "மறுநாள் அவர்கள் வரும் போது எனது காதில் ஓணான் புகுந்து இறந்துவிட்டாதாக சொல்" என்று சொன்னார். அந்த மூவரும் மறுநாள் வந்தபோது, துறவியின் சீடனும் அவர்களிடம் துறவி சொன்ன மாதிரியே சொன்னான்.
அதற்கு முதலாமவன், "துறவியின் ஜாதகப்படி சனித்திசை என்பதால் இப்படி நடந்திருக்கலாம்!" என்று வருத்தத்துடன் சொல்லிச் சென்றான். இரண்டாமவன், "துறவி போன ஜன்மத்தில் செய்த பாவத்தால், இவ்வாறு ஆகியிருக்கும்!" என்று கவலையுடன் சென்றான். ஆனால் மூன்றாமவன், அந்த சீடனின் முகத்தை உற்று பார்த்து, துறவி நிச்சயம் இறக்கவில்லை என்று அடித்துக் கூறினான். அதுவரை மடாலயத்திற்குள் இருந்த துறவி வெளியே வந்து "எப்படி சரியாக சொன்னாய்?" என்று கேட்டார்.
"குருவே! உங்கள் இறப்பினால் வரக்கூடிடய வருத்தம் உங்கள் சீடனின் முகத்தில் சிறிது கூட தென்படவில்லை. அதிலும் ஒருவரின் காதுக்குள் ஓணான் நுழைவது என்பது சாத்தியமே இல்லை. ஆகவே தான் நான் உறுதியுடன் சொன்னேன்" என்று கூறினான். அவனது விவேகத்தைக் கண்டு திகைத்துக் போன துறவி, அன்று முதல் அவனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.
ஆகவே ஒருவனிடம் வேகம் இருக்கலாம். ஆனால் அதே நேரம் விவேகம் நிச்சயம் வேண்டும் என்பதை இந்த கதை நன்கு கூறியுள்ளது.