ஊரின் ஒதுக்குப்புறமாக சிறிய குடில் அமைத்து தங்கியிருந்தார் அந்தத் துறவி. தன்னுடைய பணிகள் அனைத்தும் முடிந்ததும், இரவு நேரங்களில் விளக்கொளியில் அமர்ந்து சிறந்த ஞான நூல்களை வாசிப்பதும், அவற்றின் உண்மை நிலையை பற்றி ஆராய்வதும் அவரது வழக்கங்களில் ஒன்றாக இருந்தது.
ஒரு நாள் வழக்கம்போல அவர் இரவு நேரத்தில் விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்து நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது திருடன் ஒருவன், சத்தம் இல்லாமல் அந்தக் குடிலுக்குள் புகுந்தான். கவனமாக இருந்தும், அவனது கால் பட்டு எதுவோ உருண்டது.
சப்தம் கேட்டு திரும்பிய துறவி, ‘ஓசை எழுப்பாதே! என் கவனம் சிதறுகிறது’ என்று சொல்லி விட்டு மீண்டும் நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.
துறவியின் அந்த வார்த்தையைக் கேட்டு பயந்து போன திருடன், தான் இடுப்பில் வைத்திருந்த கூரான கத்தியை எடுத்தான். அப்போது துறவி அவனைப் பார்க்காமலேயே, ‘உனக்கென்ன வேண்டும்?. பணமா?. அது அந்த இழுப்பறையில் இருக்கிறது, எடுத்துக்கொள்!’ என்று இழுப்பறை இருந்த திசையை நோக்கி கையைக் காட்டினார்.
சற்றே திகைப்பில் ஆழ்ந்தாலும், கையில் கத்தியைப் பிடித்தபடியே சுதாரிப்புடன், இழுப்பறை இருந்த திசைக்கு நகர்ந்து, இழுப்பறையில் தன் கையை வைத்தான்.
அப்போதும் தலையை நிமிராமல், ‘மெதுவாக இழு. இழுப்பறை விழுந்து விடப் போகிறது’ என்று கூறிய துறவி மீண்டும் நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.
திருடனுக்கு மேலும் திகைப்பு. மர இழுப்பறையை இழுத்தான். அப்போது துறவி மீண்டும் பேசினார்.
‘நாளை அரச காவலர்கள் வருவார்கள். அவர் களுக்கு வரி செலுத்த வேண்டும். வரியை செலுத்தாமல் இருப்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. எனவே அதற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு, மீதம் இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள்!’ என்றார்.
திருட வந்தவனுக்கு கைகால் உதறியது. அந்த துறவி சொன்னது போலவே கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். பின்னர் வாசலை நோக்கி நகர்ந்தான்.
அந்த துறவி கூறினார். ‘கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது தான் நல்ல பழக்கம். நன்றியில் தான் நல்ல விஷயங்களே ஆரம்பமாகின்றன’. இப்போதும் கூட அந்தத் திருடனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
திருடன் வாய் குளறியபடியே, ‘நன்றி’ என்று சொல்லி விட்டு வேகமாக செல்ல முயன்றான்.
‘கதவை சாத்திக் கொண்டு போ. இல்லையெனில் காற்றில் விளக்கு அணைந்துவிடும்’ என்றார் துறவி.
திகைப்பா? குழப்பமா?. எந்த மனநிலையில் நாம் இருக்கிறோம் என்றே திருடனுக்கு புரியவில்லை. துறவி கூறியபடியே குடிலின் கதவை சாத்திக் கொண்டு, விட்டால் போதும் என்பது போல் வேகமாக ஓட்டம் எடுத்தான்.
சில நாட்கள் கழித்து அந்த திருடன், அரச காவலர்களிடம் பிடிபட்டான். அவன் எங்கெல்லாம் திருடினான் என்ற உண்மையை காவலர்களிடம் ஒப்புக்கொண்டான். சாட்சியம் சொல்ல காவலர்கள், துறவியையும் அழைத்தனர்.
அரசவைக்கு வந்த துறவி, ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்?. இவன் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லையே. இவன் அப்போது கஷ்டத்தின் பிடியில் இருந்தான். அவனுக்கு பணம் தேவையாக இருந்ததால், நான்தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தேன்.
என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்லிவிட்டு, கதவையும் சாத்திக் கொண்டுதான் சென்றான். இதுபற்றி அவனையே கேளுங்கள்’ என்று காவலர்களிடம் கூறினார். மேலும் அந்த திருடனை நோக்கி, ‘நான் சொல்வது உண்மைதானேயப்பா?’ என்றும் கேட்டார்.
திருடனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. அது அவன் மனம் திருந்தி விட்டதை வெளிப்படுத்தியது. குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வெளியில் வந்த திருடன், துறவியிடமே சென்று சீடனாக சேர்ந்தான்.
சந்தர்ப்பம் ஒருவனை குற்றவாளியாக மாற்றலாம். ஆனால் அவர்கள் மனம் மாற சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை, அன்பு என்னும் வலிமை மிகு ஆயுதம் நொடியில் செய்து விடும்.