இதுவரை
நீ ஆராதித்த
வசீகரம்
இன்றுமுதல்
அருவருப்பாகும்!
கன்னியர் கவர்ந்திட
நீ செய்த
பிரயசனம்
கண்ணாடியும்
கைக்கொட்டி
சிரித்திடும்!
நாளையென்பது
விலகியோடி
இன்றெனும் பயம்
உன் அகராதி
நிறைத்திடும்!
உச்சிப்பொழுது
எழுந்துப் பழகிய நீ
உதய வேளை
காண ஏங்குவாய்...
உன் கண்படும்
காலைக் கதிரவனும்
மூன்றாம் பிறையாய்
கண்ணீர் சிந்திடும்!
இரவு மட்டுமே
இன்பந் தரும்!
பகலுன் பகையாகும்!
கூடுதல் பாரமாய்
ஒட்டிக் கொண்ட
கற்றைகள் பார்த்த
பர்ஸதுவும்
உன்னை
பல்லிளித்து
பகடிச் செய்யும்!
நண்பர் கூட்டம்
மெல்லக் கரையும்...
நித்திரை மட்டுமே
உன் நட்பாகும்!
நெருங்கிப் பழகிய
நெடுங்காதல்
அத்தியாயம்
நேற்றோடு
முற்றுப் பெற்றிருக்கும்!
கடந்திடும் தினம்
ஒவ்வொன்றிலும்
உன்
வாலிபக் கனவு
வதங்கிச் சாகும்!
உன்னை
தேடிடும் தேதி
அதுக்கூட
இன்று போனால்
கிழிந்தே போகும்!
உறவுகள் கேட்கும்
நல உசாவல்கூட
ரணமாய் உன்னை
கொத்தி தின்னும்!
பிடித்தது,பிடிக்காதது
மறந்துப் போய்
கிடைத்திடும் பருக்கை
அமுதமாகும்!
அதுவும்
உதவாக்கரை
அந்தஸ்த்துடனே
உள்ளிறங்க சம்மதிக்கும்!
சுற்றிப் பார்க்கும் சுற்றம்
மத்தியில்
உன்
வியர்வையும்
கண்ணீரும்
வித்தியாசமின்றி
போகும்!
நேற்றுவரை
நீ ரசித்த
குத்துப் பாடல்
இன்று முதல்
முகாரியாகும்!
அடிக்கடி ஆண்மை
செத்துப் பிழைத்து
குருதியோட்டத்தில்
வேகம் உறையும்!
படிப்போம்...
முடிப்போம்...
பார்ப்போமென்ற
பசப்புவாதம்
பாடையேற்றி
வேலை
படித்திடுங் காலத்தே
தேடிடு!
நினைத்தப் பணியது
கிடைக்கா வேளை
கிடைக்கும் பணியதில்
லயித்திடு!
தண்டச்சோறு புகழ்
தாவியணைக்குமுன்னம்
நண்பா நீயும்
விழித்திடு!!!